அய்யா வைகுண்டரின் அவதார தினம்: யார் இந்த அய்யா? எதற்கு அய்யாவழி ?

சமூகத்தில், ஏற்றத்தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ பாடுபட்ட அய்யா வைகுண்டரின் அவதார தினம் மார்ச் 4 அன்று கொண்டாடப்படுகிறது. அய்யா வைகுண்டரை அவரது காலத்திலேயே விஷ்ணுவின் அவதாரமாக வழிபட்டு வந்த நிலையில் பின்னாளில் இந்நம்பிக்கை அய்யா வழி என்னும் மரபாகி இன்றும் நீடிக்கிறது.
அய்யா வைகுண்டரின் அவதார தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் அவரைப்பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்வது அவசியம்.
யார் இந்த அய்யா வைகுண்டர் ?
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு என்னும் இடத்தில் பொன்னு நாடாருக்கும், வெயிலாளுக்கும் பிறந்த முத்துக்குட்டி தனது 22-வது வயதில் கடுமையான நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அது முத்துக்குட்டியின் பெற்றோரை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. அப்பொழுது ஒரு நாள் முத்துக்குட்டியின் பெற்றோர் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, முத்துக்குட்டியை திருச்செந்தூர் மாசித் திருவிழாவுக்கு அழைத்து வந்தால் நோய் குணமடையும் என்று சொல்ல, பெற்றோரும் நம்பிக்கையில் மகிழ்ந்தனர்.
மஹாவிஷ்ணுவின் கட்டளையை ஏற்று 1833-ஆம் ஆண்டு மாசி மாதத்தில் முத்துக்குட்டியை அவரது பெற்றோர்களும், உறவினர்களும் திருச்செந்தூருக்கு தோளில் சுமந்து அழைத்து சென்றனர். நீண்ட நேர பயண களைப்பால் முத்துக்குட்டியை சுமந்து வந்தவர்களும், பெற்றோர்களும் சிறிது நேரம் ஓய்வெடுக்க, முத்துக்குட்டி தொட்டிலில் இருந்து இறங்கி கடலை நோக்கி நடக்கத் தொடங்கி பின்னர் திருச்செந்தூர் கடலுக்குள் ஓடி சென்று மறைந்து விட்டார்.
ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்கள் விழித்து பார்த்தபோது அங்கே முத்துக்குட்டி இல்லாததை கண்டு கலங்கினார். அப்போது அவர் கடலில் விழுந்து இறந்துவிட்டார் என சொந்த பந்தங்கள் சொல்ல "என் பிள்ளை நிச்சயம் வெளியே உயிருடன் வருவான்" என கரையிலேயே காத்திருந்தனர் முத்துக்குட்டியின் பெற்றோர்கள்.
அதேபோல முத்துக்குட்டி வெளியே வந்தார். ஆனால் கடலில் இருந்து வெளியே வந்தவர் முத்துக்குட்டியாக இல்லாமல் அய்யா வைகுண்டர் என்ற பெயரில் மகாவிஷ்ணுவில் பத்தாவது அவதாரமாக வந்துள்ளதாக கூறி தர்மத்தை நிலைநாட்டவே திரும்ப வந்துள்ளதாக தெரிவித்தார். நாளடைவில் கலியுக கடவுள் என மக்கள் அவரை வணங்கத் தொடங்கினர்.
இந்நிலையில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் அப்பகுதியில் வாழும் மக்கள் கடுமையான சாதிய கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மேலும் பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான இந்த கொடுமைக்கு வலுவாக குரல் கொடுத்தார். அனைவரையும் போல் மேலாடைகளை அணியச் சொன்னார். மக்கள் நன்மைக்காக பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார்.
மேலும் அனைத்து மக்களும் இடுப்பில் கட்டிய துண்டை தலையில் கம்பீரமாக கட்டிக்கொண்டு வழிபாடு நடத்த வேண்டும் என்றும் கடவுள் அனைவருக்கும் பொதுவானவர், அது ஒரு ஆற்றல் என்றும் மனிதனும் கடவுள்தான், தெய்வமும் கடவுள்தான் என பரப்புரை மேற்கொண்டார் அய்யா வைகுண்டர். அன்பு, அறிவு, பொய்யாமை, சமதர்மம், ஆன்மீகம் போன்றவற்றை ஒழுக்க நெறியாக போதித்தார் அய்யா வைகுண்டர்.
இதுபோன்ற அய்யா வைகுண்டரின் ஆன்மீக புரட்சி பரப்புரை திருவிதாங்கூர் ஆட்சியாளர்களுக்கு கடும் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் பல சித்ரவதைகளுக்கு ஆளாகி சிறை வாசத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்ட அய்யா வைகுண்டர் 1851-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வைகுண்டம் சென்றதாக நம்பப்படுகிறது.
அய்யா வைகுண்டர் வழியில் உருவ வழிபாடு கிடையாது. கடவுள் உனக்குள் இருக்கிறார் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் கண்ணாடி முன் நின்று வழிபடுவது இங்கு தனிச்சிறப்பு.
மன்னனின் அநியாய வரிகளை எதிர்த்த அய்யா வைகுண்டர், உடல் தூய்மையை வலியுறுத்தும் அதே வேளையில் சாதிய பாகுபாடுகளை களைய அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து ஓர் கிணற்றில் குளிக்க வைத்தார். சிவனின் நெற்றியில் இருக்கும் ஞானக்கண்ணை குறிக்கும் வகையில் திருநீரையே நாமமாக இடம் வழக்கத்தை ஏற்படுத்தினார். தீண்டாமையை ஒழிக்கும் வண்ணம் அனைவரையும் அவரே தொட்டு திருநீறு நாமம் இடும் வழக்கத்தை கொண்டு வந்தார்.
நான் பெரிது நீ பெரிது என்ற நிச்சயங்கள் பார்ப்போ மன்று, வான் பெரிது அறியாமல் மாள் கிற வீண் வேதமற்றவர்களாக இந்த உலகம் மாறி உலகம் ஒரு குடைக்கு கீழே இயங்க வேண்டும் என்பது அய்யா வைகுண்டரின் எண்ணமாக இருந்தது.
எந்த ஒரு தனிமனிதனும் நெடுங்காலம் இருக்க முடியாது, இறுதிவரை இருப்பது மானுடமே என்றும் மானுடத்தின் மதிப்பீடுகளை தனிமனிதன்தான் வகுக்க வேண்டும் என்பதும், ஒவ்வொருவரும் பொய் புரட்டு இன்றி எளிமையாய் அறம் சார்ந்து வாழ வேண்டும் என்பதும், காட்டுக்குப் போய் கடும் தவம் செய்வதற்கு பதில் வீட்டுக்குள் சொந்த பந்தங்களுடன் முறிவு ஏற்படாமல் புத்திரரோடு மகிழ்ந்திருப்பதே ஆன்மீகம் என்கிறது அய்யாவழி.
இந்த புண்ணிய நாளிலிருந்து அய்யாவழி நடப்போமாக !!!
Tags:
#அய்யா வைகுண்டர் #Ayya Vaikuntar #அய்யா வைகுண்டர் அவதார தினம் #அய்யா வைகுண்டர் வரலாறு #அய்யா வைகுண்டர் தத்துவங்கள்