Mahakumbh Mela | மகா கும்பமேளா நிறைவு. 62 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடல்!

By News Dsk

உலகின் மிகப்பெரிய ஆன்மிக கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 62 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடிய இந்நிகழ்வில், இறுதி நாளான இன்று மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட பிரயாக்ராஜ் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் ஒன்றாக சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஆன்மிக கலாசார நிகழ்வில் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதிலும் இருந்து வந்த கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

குறிப்பாக, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகள் என பல்துறை வல்லுநர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்தர்களும் என ஏராளமான வி.வி.ஐ பிக்களும் இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

மகா சிவராத்திரியான இன்றுடன் மகா கும்பமேளா நிறைவு பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதி நாளான இன்று மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட பிரயாக்ராஜ் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் திரிவேணி சங்கமத்தில் ஒரு கோடியே 24 லட்சம் பேர் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி அடுத்த மகா கும்பமேளா, 2169 - ஆம் ஆண்டு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS