மும்பை: இந்திய பங்குச் சந்தை (National Stock Exchange of India) வர்த்தகத்தில் சென்செக்ஸ் (SENSEX) 1000 புள்ளிகளுக்கு மேல் மற்றும் நிப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
உள்நாட்டு பங்குச் சந்தைகள் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் சரிவுடன் முடிவடைந்தன. மத்திய பட்ஜெட் மற்றும் டெல்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பங்குச் சந்தை புதிய உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 5 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.14 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இதனால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் செய்வதறியாது நிற்கின்றனர்.
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் கடந்த 5 நாளில் 1,600 புள்ளிகள் சரிந்து மிகப்பெரிய இழப்பைப் பதிவு செய்துள்ளது. அதேபோல நிஃப்டி (NIFTY) 475 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.426 லட்சம் கோடியிலிருந்து ரூ. 412 லட்சம் கோடியாகக் சரிந்துள்ளது. இதன் மூலம் மொத்த இழப்பு ரூ.14 லட்சம் கோடி என கணிக்கபட்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ், கிர்சம், டிரென்ட், பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகளின் விலை ஏற்றத்துடனும், அப்பல்லோ ஹாஸ்பிட்டல், ஐஷர் மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், கோல் இந்தியா, பாரத் எலக்ட்ரானிக் ஆகிய பங்குகளின் விலை சரிந்தும் வர்த்தகமானது. பொதுவாக வங்கி, ஆட்டோ, மெட்டல் மற்றும் ஐடி பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
மேலும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லாதது, அமெரிக்காவின் வர்த்தக கொள்கை, எப்.ஐ.ஐ., வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக பெரும் சரிவை சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.