ஆன்லைன் மூலமாக விளையாடப்படும் இவ்வகையான விளையாட்டுகளில் இளைஞர்கள் அதிகநேரம் செலவிடுவதும், அதிக பணத்தை இழப்பதும் அதன் விளைவாக தங்கள் வாழ்க்கையையே முடித்துக் கொள்வதும் தொடர்கதையாகி வரும் சூழலில், தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கான நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன் படி தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி பணம்கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு என்பது தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி, 'வெற்றிகளை' ஈட்டுவதற்கான எதிர்பார்ப்புடன் பணத்தை டெபாசிட் செய்யும் விளையாட்டு என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் கீழ்கண்ட கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கட்டுப்பாடுகள் என்னென்ன ?
1. 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்கு தடை.
2. ஆன்லைன் விளையாட்டு விளையாடுவோரின் விவரங்களை அறியும் விதமாக அவர்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும்.
3. ஒரு நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடும்போது பாப்-அப் எச்சரிக்கைகளை கொடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர் டெபாசிட் செய்யும் போது, அவர்களது பண வரம்பு மற்றும் மொத்த செலவுகளைக் காண்பிக்கும் நினைவூட்டல் செய்தியை வழங்க வேண்டும்.
4. ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களில் 'ஆன்லைன் கேமிங்' என்பது அடிமையாக்கும் என்பதை எச்சரிக்கை செய்தியாக காண்பிக்க பட வேண்டும்.
5. நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கக் கூடாது.
இக்கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.